ஓல்ட்  ஸ்டூடண்ட் துரைமுருகனும்  நியூ ஸ்டூடண்ட் உதயநிதி ஸ்டாலினும்  

Rajinikanth with CM Mk Stalin in the book release function
நூல் வெளியீட்டு விழாவில் முதல்வருடன் ரஜினி
Published on

திமுக மேடைகளில் முன்பெல்லாம் ரஜினி ஏறினால் ஏகத்துக்குக் கலாய்ப்பார். அத்துடன் துரைமுருகனை கலைஞர் முன்னிலையில் கடுமையாகக் கிண்டல் செய்வார். எல்லோரும் ரசிப்பார்கள். கிட்டத்தட்ட திமுகவின் அனைத்து மூத்த தலைவர்களுடன் நட்பு பாராட்டக்கூடியவர் ரஜினி. அதே பாணியில் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசப்போக அதில் இருந்த சில உள்ளுறை அர்த்தங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றன.

”முதலமைச்சர் பதவியைக் கட்டிக்காக்க பக்கத்து மாநிலங்களில் எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால், அதனை சாதாரணமாக கையாள்கிறார் ஸ்டாலின். பள்ளியில் புதிய மாணவர்களைச் சமாளிப்பது எளிது. ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். இங்கே ஏகப்பட்ட பழையவர்கள் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் சமாளிப்பது சாதாரண விஷயமல்ல. துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். கலைஞர் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர் அவர். அந்த வகையில் ஸ்டாலினுக்கு எனது ஹாட்ஸ் ஆப் ‘என்றார் ரஜினிகாந்த்.  இதில் புதியவர்களுக்கு வாய்ப்புத் தரவேண்டும் என்ற கருத்து இருப்பதாகவே புரிந்துகொள்ளப்பட்டது. இதே பேச்சில் இன்னொரு இடத்தில் உதயநிதியைப் பாராட்டிப் பேசினார். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தாவேண்டும் என்ற கருத்து பரவலாக இருக்கும் நிலையில் இவை அனைத்தும் முடிச்சுப் போடப்படுகின்றன.

துரைமுருகன் பதிலடியும் பல்டியும்

அமைச்சர் துரை முருகனிடம் ரஜினி கருத்து பற்றிக் கேட்டபோது அவரும் பதிலடி கொடுத்தார். “ பல்லு போன நடிகர்கள் தொடர்ந்து நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லை.  மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி தாடி வளர்த்து நடிக்கின்றனர். சாகக்கிடக்கும் வயதானவர்கள் எல்லாம் நடிப்பதனால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதையெல்லாம் மறந்துட்டு ஏதோ ஒண்ணு பேசுறாரு…’ என்று நேரடியாகவே அவர் கடுமையாகப் பேசிவிட்டார்.

இந்த சர்ச்சைக்குப் பின் ஏண்டா புத்தக விழாவுக்குப் போனோம் என ரஜினி நினைத்திருப்பார். இவரை ஏண்டா கூப்பிட்டோம் என திமுக காரர்கள் நினைத்திருப்பார்கள் என்று நினைத்தால் நாம் சாமானியர்கள்.

இந்நிலையில் துரைமுருகன் என் நீண்ட நாள் நண்பர். அவர் என்னைப் பற்றி என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது என்று ரஜினி காந்த் விமான நிலையத்தில் சொன்னார். இதைத் தொடர்ந்து என்ன நடந்ததோ தன்னுடைய ரஜினி பற்றிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன்.  ‘நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக ஆக்கவேண்டாம்’ என அவர் கழன்றுகொண்டார். மூத்தவரும் சின்னவரும் சொன்னதை அடுத்து ரஜினியும் துரைமுருகனும் போனில் பேசி சமாதானம் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

முரசொலி தலையங்கம்

இன்றைய முரசொலியில் சூப்பர் ஸ்டாரின் பாராட்டு என்ற தலைப்பில் ரஜினியின் உரையைப் பாராட்டி தலையங்கம் வந்துள்ளது.

”மாண்புமிகு அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் எழுதிய 'கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆற்றிய உரை என்பது இதயத்தின் அடியாழத்திலிருந்து ஆற்றிய உரையாக அமைந்திருந்தது’ என்று அந்த கட்டுரை குறிப்பிடுகிறது.

திமுக பொறியாளர் அணி விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ’ரஜினிகாந்த் பேசிய பேச்சில் எந்த பகுதிக்கு அதிக கைத்தட்டல் விழுந்தது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். .. டிவியில் பார்த்திருப்பீர்கள்.. நான் சொன்னால் சரியா இருக்காது…” என்று பேசியதும் கவனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

அப்படியென்றால் பழைய மாணவர்களைக் கட்டம் கட்டும் நடவடிக்கைக்கு ரஜினி பேச்சின் மூலம் அச்சாரம் போடுகிறார்களா? என்ற கேள்வி எழுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com